Home
கவிஞர் குமரித்தோழன் PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Sunday, 09 December 2012 07:32

கலையை கனப்படுத்த வந்திருக்கும் கவிஞர்களில் குமரித்தோழன் கவனத்திற்குரிய கவிஞர் என்பதற்கு அவரது கவிதை நூல்களே சாட்சி எனலாம்.

வாழ்க்கையின் யதார்த்தங்களிலிருந்து வேறுபடாமல் நிஜங்களையும், வாழும் சூழல் சார்ந்த சமூக அக்கறைகளையும், மனித நேயங்களையும் தேர்வு செய்து, மனித வாழ்க்கையை அருமையாக படம் பிடித்தும் அவற்றை கவிதை நூல்களாக வெளிய

ிட்டு வாசகர்களின் வசமாகிப்போனவர் கவிஞர் குமரித்தோழன்.

இவரது சிந்தனை சிம்மாசனத்திலிருந்து வேர்விட்டு கிளம்பும் இவரது கவிதைகள், ஒடுக்கப்பட்டவர்களின் இருண்ட வாழ்க்கையையும், அவர்களது ஓலக்குரல்களையும் உள்வாங்கி இருக்கின்றன.

விடியலைத்தேடும் முயற்சிகளில் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையையும் கொண்ட இவர் உலகத்தின் அதிசயங்கள் ஏழு என்பதைப்போல ஏழு நூல்கள் எழுதியுள்ளார்.

மிலனின் முத்து எனும் குறுங்காவியம், பிள்ளைகளே உங்களுக்காக எனும் பொது அறிவு நூல், மறப்புலி எனும் புதினம், தூய ஜான் மரிய வியானி எனும் வரலாறு நூல், சின்னராணி எனும் வரலாறு நூல், தணியாத தாகங்கள் எனும் கவிதைத்தொகுதி, விடியல் தேடும் விதிகள் எனும் கவிதைத்தொகுதி என ஏழு நூல்கள் இவர் படைப்பில் வெளிவந்திருக்கின்றன.

இவரது தணியாத தாகம் கவிதைத்தொகுதி பல இலக்கிய விமர்சகர்களாலும்,மாணவ மாணவியர்களாலும் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டிருக்கிறது.

வறுமை என்ற பிணியினை படைத்த இறைவன் யாரோ வறியோர் செல்வர் பாகுபாடு
மானிட மடமையின் வெளிப்பாடு –என்ற கவிதை வரிகள் நிஜங்களையும், நியாயங்களையும் சுட்டிக்காட்டுவதோடு பாகுபாடு மானிட மடமையின் வெளிப்பாடு என்று சாட்டையாக சுழலப்படுகிறது இவரது அனல் கவிதைகள்.

இவரது இன்னொரு கவிதைத்தொகுப்பு நூலான விடியல் தேடும் விதிகள் நூலில்

மரண ஓலமிடுகின்றது கல்வி இன்று கள்வர் குடோனில் காய்ந்து கிடக்கும் கல்விக்கூடங்களைக்கண்டு- என்று

கல்வியின் வெளிப்பாடு குறித்த நிஜ சிந்தனைகளை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். இது தவிர இறைவார்த்தை, உலகின் கடை எல்லை வரை, அன்னை எங்களோடு கூறியன, சகோதரனின் காவலன், எடத்துவா தூய ஜார்ஜியார், உயிர் நினைவுகள் என ஆறு வேற்று மொழி நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

இவர் கவிஞர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நாடக நடிகரும், எழுத்தாளரும் நாடக இயக்குநரும் கூட. வைர நெஞ்சம், சக்தி, உதிரிப்பிறவி, பாஞ்சால சிறுத்தை, திருப்புமுனை, இறைமாட்சி, முத்துப்பல்லன், மாவீரன் இப்தா, தூய தோமையார், மூர்க்க வீரன், பதுவை இதயம், மாயரூபம், ஏன்?, இறைமைந்தன், மாளிகை தேடிய மயில், மறைத்தொண்டன் என பதினாறு மேடை நாடகங்கள் எழுதி அத்தனையும் மேடைகளில் நடிக்கப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றவர்.

இது தவிர இருபத்தி ஏழு ஓரங்கநாடகங்கள், பதிமூன்று தனி நபர் நாடகங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய பாடல்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க தெரு நாடகங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன..

இவர் சிறந்த கலைஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த பட்டிமன்ற நடுவர் மற்றும் பேச்சாளரும் கூட.. சுமார் 200 க்கும் மேற்பட்ட பட்டி மன்றங்களிலும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மேடைகளிலும் அற்புதமாக பேசி அனைவரது கைத்தட்டல்களை அள்ளூபவர், 25 க்கும் மேற்பட்ட கவியரங்குகளில் கலந்து கொண்டு தனது உணர்வுப்பூர்வமான கவிதைகளை வாசித்து அரங்கங்களை அதிர வைத்து கேட்பவரை வசியப்படுத்தியதுண்டு.

இவரது படைப்புகள் எம்.ஏ, எம்.பில் பி.ஹெச்.டி பயிலும் மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டு பலரும் பட்டம் பெற்றிருக்கிறார்கள், குமரித்தோழனின் மேடை நாடகங்கள் ஓர் ஆய்வு என்று திரு ஜார்ஜ் என்பவரும், குமரித்தோழனின் நாடகங்களில் சமூகப்பார்வை என்று செல்வி ரெஜியும், குமரித்தோழனின் மேடை நாடகங்கள் என்று திரு ஹரிகுமாரும், குமரித்தோழனின் கிறிஸ்தவ மேடை நாடகங்கள் என்று மிஜோடார்சிலினும், அச்சில் ஏறாத கிறிஸ்தவ மேடை நாடகங்கள் என்ற தலைப்பில் திருமதி மோஸாலினோவும் ஆய்வு செய்திருக்கிறார்கள்,

மாவட்ட நாடகக் கலைஞர்கள் சங்கம் இவருக்கு கலைவாணர் விருதும், தமிழ்நாட்டு கலை பண்பாட்டுத்துறையும் தென்மாவட்ட கலைச் சங்கங்களின் கூட்டமைவும் இணைந்து கலைச்சுடர் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

குமரிமாவட்டத்திலிருந்து வெளிவரும் ஒளிவெள்ளம், எழுமின் மாத இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கும் இவர் ஒளிவெள்ளம் மாத இதழில் ``இந்தீவரம்’’ எனும் தொடரையும், எழுமின் மாத இதழில் ’’வாழ்வாங்கு வாழ’’ எனும் வாழ்வியல் தொடரையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இவரது சிறுகதைகள், கவிதைகள் பல மாத இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. தமுஎகசவின் மாவட்ட துணைத்தலைவராகவும் மற்றும் இலக்கிய குழு ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் வெளியீட்டுக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

இலக்கிய உலகில் மேலும் பல நூல்களையும், நாடகங்களையும், படைத்து பல பட்டங்களையும் பெற்று மேன்மேலும் வளர முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.

முகவரி: தச்சக்கோடு, மெதுகும்மல் அஞ்சல், குமரிமாவட்டம் – 629 172 கைபேசி 9486012720 இமெயில்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 09 December 2012 07:35